முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணை திறப்பு

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை 11.15 மணி அளவில் மதகுகளை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலில் சுமார் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர் திறந்து விடப்பட்டது. அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணைக்கு நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,508 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 117.76 அடியாக உள்ளது.

நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 89.94 டி.எம்.சி-யாக உள்ளது. குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 125. 68 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முதல் முறையாக மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 1936 முதல் 1947 வரையிலான காலகட்டங்களில் 11 ஆண்டுகள் ஜூன் 12க்கு முன்பே அணை திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.