முதலமைச்சர் கண்ணையா குடும்பத்திற்கு நிவாரணம்- அறிவிப்பு

Filed under: சென்னை |

சென்னை ஆர்.ஏ. புறம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் மக்களின் 259 கல் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்துவந்த சூழலில் இன்று காலை கண்ணையன் (வயது 60) என்ற முதியவர் வீடுகள் இடிப்பதை கண்டித்து ‘இந்த ஜனங்களை காப்பாத்துங்க’ என்று முழங்கிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.

 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கிரீன்வேஸ் சாலையின் அருகில் பங்கிஹ்காம் கால்வாயையொட்டி இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு ஆகியவை உள்ளன. இதில் இளங்கோ தெருவில் சுமார் 259 வீடுகள் ஆக்ரமிப்பில் உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வீடுகளை இடிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 29ம் தேதி வீடுகளை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இதனை அப்பகுதி மக்கள் வாங்கவில்லை. இதுதொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனுக்களை அனுப்பி உள்ளனர். ஆனாலும், இளங்கோ நகரில் உள்ள வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டனர். கடந்த 29ம் தேதி வீடுகளை இடிக்க முற்பட்டபோது சிலர் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவதாக எச்சரித்ததால் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

ஒருகட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்ற நபர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவரைக் காப்பாற்றிய உள்ளூர்வாசிகள் அவரை அவசர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.ஏ புரத்தில் தீக்குளத்தில் உயிரிழந்த கண்ணைய குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் அருகிலேயே வழங்கப்படும் என்று இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.