முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் கிடைத்தது என்ன?

Filed under: அரசியல் |

அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ந்து 8 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் இருவரது வீடுகளுக்கு முன்னால் கூடி போராட்டம் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் சோதனை செய்து பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 8 மணி நேரமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனை முடிவு பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எஸ்.பி.வேலுமணி வீட்டில் எடுத்த ஆவணங்கள் தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதுகுறித்த தகவலை வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இன்று மாலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவி, பத்து 4 சக்கர வாகனங்கள், 32.98லட்சம் ரொக்கம், 1228 கிராம் தங்கம், 948 கிராம் வெள்ளி பொருட்களும் கண்டறியப்பட்டன.
மேலும், முன்னாள் அமைச்ச்ர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 120 ஆவணங்கள் 4 வங்கி பெட்டக சாவிகள், 2 ஐபோன்கள் 18,37 லட்சம், 1872 கிராம் தங்க நகைகள், 8,28 கிராம் வெள்ளி பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளது.

ஆனால் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகிய இருவருமே இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தங்களிடமிருந்து எவ்வித ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் இது அனைத்துமே பழிவாங்கும் செயலாகவே உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.