ரீ ரிலீஸாகும் ‘பையா’!

Filed under: சினிமா |

தற்போது 14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

சமீப நாட்களாக ரீ ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் அதற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முன்னோட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் கமலா திரையரங்கில் ஒரு காட்சி திரையிடப்பட்டது. படம் வெளியானபோது ஏற்பட்ட அதே ஆரவாரத்தை இப்போதும் படம் பார்த்தவர்களிடம் பார்க்க முடிந்தது. ‘பருத்திவீரன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அத்திரைப்படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தியை அதற்கு முற்றிலும் மாறாக ஒரு நகரத்து சாக்லேட் பாயாக ‘பையா’ படம் மூலம் உருமாற்றினார் இயக்குநர் என்.லிங்குசாமி. இதில் நடித்த கார்த்தி, தமன்னா ஜோடி ரசிகர்களின் மிகப்பெரிய அன்பை பெற்றது. அதற்குப்பின் இன்னும் அப்படி ஒரு ஜோடி வரவில்லை என்றே சொல்லலாம். என்.லிங்குசாமியின் பரபரக்க வைக்கும் திரைக்கதையும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியாகி ரசிகர்களின் தேசிய கீதமாகவே மாறிப்போன பாடல்களும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக அமைந்தன. ‘பருத்திவீரன்’ படத்தில் ஒரே ஒரு வேட்டி சட்டையுடன் நடித்த தன்னை இந்த படத்தில் கலர் கலராக உடை அணிய செய்தார் இயக்குநர் என்.லிங்குசாமி என தனது ஆச்சரியத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் கார்த்தி. கார்த்தி ரசிகர்கள் ‘பையா’ ரீ ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக இப்போதிருந்தே தயாராக ஆரம்பித்து விட்டார்கள். முதல் முறை ரிலீசான போது பெற்ற அதே வரவேற்பை இந்த மறுவெளியீட்டிலும் ‘பையா’ பெரும் என்பது உறுதி. இதற்கான வேலைகளை தயாரிப்பாளர் என்.சுபாஷ் சந்திர போஸ் செய்து வருகிறார்.