வன உயிரின வாரவிழா: கடற்கரையில் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, அக் 2:
சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று (02.10.2021) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மாராத்தான் ஓட்டத்தை வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் திரு.அசோக் உப்ரேதி ,இ.வ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வன உயிரின வாரவிழவில், வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தை வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் திரு. அசோக் உப்ரேதி அவர்கள் துவக்கி வைத்து கூறுகையில், “முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திட உத்தரவிட்டிருந்தார். அதன்படி வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படுவதை தடுத்திட வனப்பணியாளகள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள்/யானைகள் காப்பகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கோடை காலத்தில் வனவிலங்குகளுக்கு ஆங்காங்கு தண்ணீர் தொட்டி அமைத்திடவும், காட்டுத்தீயினை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வனத்துறை மேற்கொள்ளும் வனப்பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்” என தெரிவித்தார்.

வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தில் 65 நபர்கள் பங்கேற்றனர். ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் டி சர்ட் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் முதன்மை தலைமை (வன விலங்குகள்) பாதுகாவலர் திரு.ஆகாஷ் பர்வா, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் திரு.நாகநாதன், வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் திருமதி கருணப்பிரியா, கூடுதல் இயக்குநர்(சுற்றுச்சூழல்) திருமதி அர்ச்சனா கல்யாணி, சென்னை மண்டல வனப் பாதுகாவலர் திருமதி கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வனப் பாதுகாவலர் திருமதி பிரியதர்ஷினி, துணை வனப் பாதுகாவலர் திரு.ரவி மீனா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னை வன உயிரின காப்பாளர் திரு,இ.பிரசாந்த், கிண்டி தேசிய உயிரியல் பூங்கா வனச் சரக அலுவலர் திரு.கலைவேந்தன் ஆகியோர் செய்திருந்தார்கள்.