வலிமை தயாரிப்பாளருக்கு அஜித் அனுப்பிய மெசேஜ் !

Filed under: சினிமா |

அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. முக்கியமான ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி படம் தீபாவளிக்கு வெளியாகாது எனத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட்டுகளை தினமும் அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளரிடம் கேட்ட வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் ’உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை தான் தயாரிக்கும் எந்த படம் குறித்த அப்டேட்டும் வராது’ எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது தமிழக அரசு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை செய்யலாம் என அறிவித்திருந்த நிலையில் வலிமை படத்தின் எடிட்டிங் உள்ளிட்ட வேலைகளைத் தொடங்கலாம் என தயாரிப்பாளர் போனி கபூரும், இயக்குனர் ஹெச் வினோத்தும் நினைத்திருக்க, அதற்கு அஜித் நோ சொல்லியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் ’வலிமை படத்தின் பின் தயாரிப்பு பணிகள் கொரோனா பிரச்சனைகள் முடிந்து மீண்டும் இயல்புநிலை திரும்பிய பிறகுதான் தொடங்க வேண்டும்’ அஜித் இமெயில் மூலமாக செய்தி அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.