இன்றைய உலக அரசியலில் இலங்கைத் தமிழர்களின் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள், இந்திய அரசியல் கட்சிகள், தமிழக முதல்வர் ஆகியோரில் யார் காரணம் என்ற பட்டிமன்றம் இந்திய அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய அமைதி பாதுகாப்புப்படை, இலங்கை தமிழர்களை ஒரு கட்டத்தில் கொன்று குவித்து, தமிழர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக இலங்கை பத்திரிகைககள் தற்போது குற்றம் சாட்டுவதாகக் கூறப்படுகிறதாம்.
தற்போதைய பிரதமரின் ஆட்சி காலத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபோது தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியதாக பாராளுமன்ற மைய ஹாலில் கிசுகிசுக்கிறார்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தின் இரும்புத்தூனாக கருதப்பட்ட வைகோ, தமிழர்களின் நலனை இலங்கையில் காப்பாற்ற முடியாமல் தற்போது பதவி இழந்து, செல்வாக்கு இழந்து தனிமரமாக நிற்கும் வேளையில் ஆவேசப்படுவதைக்கண்டு வடஇந்திய அரசியல்வாதிகள் நகைக்கிறார்களாம். இன்றைக்கு பாராளுமன்ற ஓட்டு வங்கிக்காக ஓங்கி குரல் உயர்த்திய தமிழக பா.ஜ.க., தான் ஆட்சி செய்தபோது இலங்கை தமிழர்களை கண்டுகொள்ளவே இல்லை என்ற கருத்து உலவுகிறது. தமிழக முதல்வர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்ற கடும் குற்றச்சாட்டு எழுப்பிய அரசியல்வாதிகள், தற்போது அவரது இலங்கை தமிழர்களின் எழுச்சி உலக மக்களை உசுப்பி விட்டு, கொதித்து எழச்செய்து உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் கறைபடிந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அறிவு ஜீவிகள் மூலம் இலங்கை அதிபருக்கு தகவல்கள் முன்கூட்டியே செல்கின்றன என்பதை பல மாதங்களுக்கு முன்பு நாம் தெரிவித்து இருந்தோம். தற்போது தமிழக முதல்வர் தன்னுடைய துறையில் அனைத்து வழித்தடங்களையும் முடுக்கி விட்டதாக கூறுகிறார்கள். இதனால் முதல்வரின் பல தீவிர திட்டங்கள் அவரது உள்வட்டத்தைத் தாண்டிச் செல்லமுடியவில்லை என்ற கருத்து உலவுகிறது. மேலும் காமன்வெல்த் மாநாட்டில் தமிழக முதல்வர் அடித்த ஆப்பு இலங்கை அதிபரை நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் வெளிநாட்டு இந்தியர்கள் பல நாடுகளில் ஓட்டுவங்கிகளாக மாறி உள்ளார்கள். இவர்கள் ஓட்டு இல்லையென்றால் வெளிநாடுகளில் பிரதமர்கள் தேர்ந்து எடுப்பது கடினம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்திய கட்சிகளின் சுயநலதன்மைகளை புரிந்து கொண்ட வெளிநாட்டு இந்தியர்கள் தமிழக முதல்வரின் இலங்கை எதிர்ப்பை கை நீட்டி வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் எதிரொலியாக பல வெளிநாடுகள் இலங்கையை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளன.
இலங்கையை ஆதரிக்கும் சீனா, தமிழக முதல்வரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு, இலங்கையின் அத்துமீறல்களை கண்டித்து உள்ளது வியப்பான செய்தி. இந்திய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தமிழக அறிவு ஜீவிகளையும் தன் கைக்குள் போட்டுக்கொண்ட இலங்கை அதிபர், எதிர்பாராத அதிர்ச்சியாக வெளிநாட்டு அதிபர்கள் தனக்கு ரிவிட் அடிப்பதை உணர்ந்து நடுங்கிக்கொண்டிருப்பதாக இலங்கை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் கதைத்து உள்ளார்களாம். இலங்கை எதிர்ப்பு என்ற அரசியல் போர்வையில் நாடகமாடிய தமிழக அரசியல்வாதிகளுக்கு, முதல்வரின் அரசியல் காற்று, எதிர்ப்பு போர்வையை விலக்கி கிழித்து விட்டதாம்.
தற்போது இலங்கை அதிபர் வெளிநாட்டு மக்களின் பார்வையில் குற்றவாளியாக கருதப்படுகிறார். இலங்கை அதிபரை ஆதரித்த இந்திய அரசியல்வாதிகள் வெட்கத்தால் தலைகவிழ்ந்து குனிந்து நிற்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிராக நாடகமாடி தமிழ்குலத்தை அழிக்கத் துணிந்த தமிழக அறிவுஜீவிகள், இலங்கை அதிபரின் தலைகுனிந்த நிலையைக்கண்டு பரிதவிக்கிறார்கள். உலகத் தமிழர்களின் காவல் தெய்வமாக தமிழக முதல்வர் உயர்ந்து தற்போது வெளிநாட்டு இந்தியர்களின் காவல் தெய்வமாகவும் மாறிவிட்டதாக கூறப்படுகிறதாம்.
இதை புரிந்து கொண்ட உலக நாட்டுத்தலைவர்கள் தங்கள் ஓட்டுவங்கிகளுக்காக தமிழக முதல்வரை பாராட்டத் தொடங்கி விட்டார்கள். இதனால் கலவரம் அடைந்த மத்திய அரசும், காங்கிரஸ் தலைமையும் முதல்வருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு தலைநகர அதிகார வட்டத்தில் உலவுகிறது!