வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவிய வில்லன் நடிகர்!

Filed under: இந்தியா,சினிமா |

மும்பை,  மே 13

கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை நிமித்தமாக, தங்களது சொந்த ஊரை விட்டு வந்த பல தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தனர்.

மும்பையில் அப்படி வந்து தவித்த சுமார் 350 வெளிமாநிலத் தொழிலாளர்களை, வில்லன் நடிகர் சோனு சூட் 10 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் அப்போது அவர் கொடுத்தார்.

ஏற்கெனவே தனக்கு சொந்தமான ஹோட்டலை கொரோனா சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கினார் சோனு. நேற்றைய அவரது செயலுக்கும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அப்போது ஒருவரது பாராட்டுக்கு ‘நானும் பிழைக்க வந்தவன் தான்’ என பதிலளித்துள்ளார்.

சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர், அங்கிருந்து நடிப்பதற்காக மும்பை வந்தவர். தமிழில் தான் அவர் முதன் முதலில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ படம் தான் அவருடைய முதல் படம். அடுத்து விஜய் நடித்த ‘நெஞ்சினிலே’ படத்தில் நடித்தார்.

அதன்பின் தெலுங்கு, ஹிந்தி என நடித்து தற்போது பிஸியான ஒரு நடிகராக இருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் நடித்துள்ளார்.