புது டெல்லி, ஏப்ரல் 28
நாடு முழுக்க பஞ்சாயத்துகளுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிக்க அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் டோமர் கூறியுள்ளார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா என்ற புதிய திட்டத்தின் வழிகாட்டுதல்களை புதுதில்லியில் அவர் வெளியிட்டு பேசினார்.
தங்கள் வீட்டு சொத்துகளை ஆவணப்படுத்தும் உரிமையை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கும் என்றும், இந்த விவரங்களைப் பொருளாதாரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். கிராமப்புறப் பகுதிகளில் திட்டமிடலை ஒழுங்குபடுத்துதல், வருவாய் வசூல் ஆகியவற்றுக்கு இந்தத் திட்டம் உதவும் என்றும், சொத்து உரிமை குறித்த தெளிவு கிடைப்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம் என்றும் அவர் கூறினார். சொத்து தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்கவும் இது உதவியாக இருக்கும் என்றார் அவர். இந்தத் திட்டத்தின்படி உருவாக்கப்படும் வரைபடங்களைப் பயன்படுத்தி, கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களை நல்ல முறையில் உருவாக்க முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இணையவழி கிராம சுவராஜ்யம் திட்டத்துக்கு கடைபிடிக்க வேண்டிய தரநிலைப்படுத்திய நடைமுறைகளையும் அவர் வெளியிட்டார். பஞ்சாயத்துகளுக்கு தரப்படும் நிதி தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், அந்த நிதி செலவிடுதலில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்யவும் இந்த நடைமுறைகள் உதவும் என்றும் அவர் கூறினார்.