இந்திய நாட்டின் 65வது குடியரசு தினம் வரலாறு காணாத அளவில் டெல்லி மக்களின் மற்றும் இந்தியர்களின் இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது என்ற பெருமை அடைகிறது. கடுங்குளிரில் தலைநகர மக்களுடன் இணைந்த மாநில மக்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் மாநிலங்களை பிரதிபலித்த ஊர்திகள் அணிவகுத்தபோது கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். வடகிழக்கு மாநில ஊர்தி சென்றபோது வடகிழக்கு மாநில அதிகாரிகள் தங்கள் மனைவிகளுடன் ஆரவாரம் செய்தனர்.
காஷ்மீர் மாநில ஊர்தி கடந்தபோது மத்திய அமைச்சர் பருக் அப்துல்லா தன் மனைவியுடன் காஷ்மீர் பாடல் இசைத்ததை தானும் பாடியபடி கைதட்டினார். அசாம் மாநில ஊர்தி கடந்தபோது மறைந்த அசாமிய தேசிய பாடகர் பூபன் அசாரிகா பாடல்களை பாடியவாறு கைதட்டினர் அசாம் அதிகாரிகள். மராட்டிய ஊர்தி மராட்டிய இசை இசைத்துக்கொண்டு அசைந்தபோது உள்துறை அமைச்சர் ஷிண்டே தன் சகாவான ஆனந்தசர்மாவிற்கு சுட்டிக்காட்டி பெருமைபட்டார். தமிழக ஊர்தி பொங்கல் திருநாளுக்கு குறிப்பிட்டு வந்தபோது, நிதி அமைச்சர் சிதம்பரம் கைதட்டி வரவேற்றார். ஆகமொத்தம் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் இந்திய திருநாட்டை உலகத்தலைவர்கள் பாராட்டினார்கள்.
தற்போது டெல்லி முதல்வர் அரசியல் நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் இரண்டும் தெரியாமல் தவிப்பதை டெல்லி மக்கள் கோபமாக பார்க்கிறார்கள். எதற்கு எடுத்தாலும் வீதி போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சி தலைவர், இவரை அப்புறப்படுத்த மக்கள் வீதி போராட்டம் நடத்த துவங்கிவிட்டார்கள். உண்மையில் டெல்லி காவல்துறை மத்திய அரசின் கீழ் உள்ளது. உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் நாட்டின் தலைநகர பாதுகாப்பு மத்திய அரசிடம் இருப்பது நடைமுறை வழக்கம். அதன்படி இந்திய தலைநகரின் பாதுகாப்பு மத்திய உள்துறை கீழ் உள்ளது. ஆனால் நிர்வாக அதிகாரம் டெல்லி முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வருக்கு டெல்லி காவல்துறை பலமுறை பாதுகாப்பு அளிக்க முன்வந்தது. ஆனால் அலட்சியமாக ஒதுக்கிவைத்த டெல்லி முதல்வர் தற்போது வாயிலும், வயிற்றிலும் அடித்து ஓப்பாரி வைக்கிறாராம். அநீதிகளை அழிக்க புறப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தற்போது அநீதிகளுடன் சமரசம் செய்ய ஆரம்பித்துள்ளதாம்.
உத்திரபிரதேசத்தில் 85 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இப்போது இந்த மாநிலம் இந்திய அரசியல் கட்சிகளை பைத்தியம் பிடிக்க வைத்துள்ளதாம். காரணம் எந்தக் கட்சியும் அதிக அளவில் வெற்றிபெற முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாம். சாதிகளை நம்பி இறங்கிய மாயாவதி, முலாயம் கட்சிகள் டெல்லி மாநில அரசியல் முடிவுகளைக் கண்டு அலறுகின்றன.
மேலும் ஜாட் இன மக்களும், முஸ்லிம் மக்களும் இணைந்து சுமார் 25 பாராளுமன்றத்தொகுதிகளை முடிவு செய்கிறார்களாம். பா.ஜ.க. 15, காங்கிரஸ் 5 முலாயம்சிங் கட்சி 20, மாயாவதி கட்சி 15 அஜித் சிங் கட்சி 5 என்று தற்போது நிலவரம் உள்ளது. ஜாட் மக்களும், முஸ்லிம் மக்களும் தற்போது முலாயம், மாயாவதி கட்சிகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் 25 பாராளுமன்ற தொகுதிகளின் ஓட்டுக்கள் மொத்தமாக பா.ஜ.க., காங்கிரசுக்கு விழுமா? அல்லது சிதறி பரவலாக வழங்கப்படுமா? என்ற பட்டிமன்றம் உ.பி. மாநிலத்தில் நடக்கிறதாம்.
தமிழ் மக்கள் உண்மையில் தமிழக கட்சிகளை நம்புகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் வளர்ச்சிக்காக தமிழக கட்சிகளின் தலைவர்கள் தமிழ் குலத்தை அடிமைப்படுத்தி பயன்படுத்தியதை தற்போது நினைவு கொள்கிறார்கள். மறைந்த இந்திரா அம்மையார், பிரிட்டிஷ் அரசு இலங்கைக்கு ராணுவம் பயிற்சி அளிப்பதை கடுமையாக எதிர்த்தார். தற்போது மத்திய அரசு இலங்கை சென்று ராணுவ பயிற்சி அளித்தது மட்டுமின்றி இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் இலங்கை வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க துணிந்துவிட்டது. காரணம் தமிழ் என்ற வீரவசனம் பேசி, தமிழர்களை முட்டாள்களாக மாற்றும் கலையை தமிழக தலைவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு விட்டது மத்திய அரசு.
தன்னுடைய அரசை காப்பாற்ற தி.மு.க. தலைவர் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது நம்முடைய கச்சத்தீவில் இந்தியர்கள் மீன்பிடிக்க அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதாடுகிறதாம். அதற்கு தமிழக தலைவர்கள் கைகட்டி, வாய்பொத்தி அடிமை ஆகிவிட்டார்கள். காரணம் தங்கள் குடும்பங்கள் காப்பாற்றப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்களாம். சினிமா பாணியில் அரசியல் வசனங்கள் பேசும் வைகோ, பா.ஜ.க. ஆட்சியின் மீது தமிழர்களை காப்பாற்ற தவறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
அரசியல் வாதிபோல சினிமாவில் அரசியல் வசனங்கள் பேசி திறமையாக நடத்திய கேப்டன், நடைமுறையில் தமிழர்களுக்கு நிலையான ஒன்றை செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழக தி.மு.க. தலைவர் பாவம் அவரது குடும்பம் காப்பாற்ற எத்தனைமுறை வேண்டுமானாலும் தமிழகத்தை குறிப்பாக தமிழர் நலன்களை அடகுவைக்கும் துணிவு கொண்டவராக சித்தரிக்கப்படுகிறாராம். தமிழக பா.ஜ.க.வும், தமிழக காங்கிரசும் வீட்டில் எலி வெளியே புலிகள். தமிழர்கள் நலனை வாய்கிழிய தமிழ்நாட்டில் பேசும் இக்கட்சிகள், தங்கள் தலைவர்களை டெல்லியில் கண்டவுடன் ‘கப்சிப்’. ஆக மொத்தம் அ.தி.மு.க. எழுச்சி தமிழர்களை காக்குமா? என்ற ஒரே சிந்தனை உலக தமிழர்களிடையே பரவி இருப்பதாகக் கூறப்படுகிறது.