தேர்வாளர் பேரவையில் (Electoral College) பைடனுக்குக் கிடைத்துள்ள இடங்களின் அடிப்படையில் ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்கள் அவரது வெற்றியை அறிவித்துள்ளன. இன்னும் சில சாங்கியங்கள், சம்பிராதாயங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்வாளர் பேரவைக்கும் கிடைத்துள்ள இடங்களைச் சான்றளிக்க வேண்டும்.
பின் அந்த தேர்வாளர்கள் டிசம்பர் மாதம் வாக்களித்து அதிபரைத் தேர்வு செய்வார்கள். இதெல்லாம் சம்பிரதாயங்கள்தான். அதனால் இறுதி முடிவில் ஏதும் மாற்றங்கள் இராது. அதே போல ஊடகங்கள் “முடிவை” வெளியிடுவதும் வழக்கம்தான்
ஆனால் –
ஊடகங்கள் முடிவை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் ”தேர்தல் இன்னும் முடியவில்லை. அதிபர் யார் என்பதை சட்டரீதியான வாக்குகள் முடிவு செய்யும். ஊடகங்கள் அல்ல” என்று டிரம்ப் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அதனால் அவர் திங்கள் அல்லது வரும் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடக் கூடும் என ஊகிக்க முடிகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நீதிமன்றத்திற்குப் போவது முன்னரும் நடந்திருக்கிறது. 2000ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பில் ஜார்ஜ் புஷ், ஜனநாயகக் கட்சியின் சார்பில் அல்கோர் போட்டியிட்டனர். ஃபுளோரிடா மாநிலத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரசினை எழுந்தது. விவகாரம் நீதி மன்றம் போயிற்று. நீதி மன்றம் ஜார்ஜ் புஷ், கோரைவிட 575 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறார் என்று தீர்ப்பளித்தது.
2016லும், டிரம்ப் ஹிலாரிக்கு இடையேயான போட்டியில் மறுவாக்கு எண்ணிக்கையில் டிரம்ப்பிற்கு ஹிலாரியை விட 131 வாக்குகள் விஸ்காசின் மாநிலத்தில் கிடைத்தது
டிரம்ப்பிற்கு இந்த முறை நீதிமன்றத்தில் வெல்ல வாய்ப்பிருக்கிறதா?
கடினம் என்றே தோன்றுகிறது. காரணங்கள் பல. ஒன்று அவர் பல மாநிலங்களில் மறு எண்ணிக்கை கோருகிறார். அதில் பென்சில்வேனியாவில் அவருக்கும் பைடனுக்குமிடையே 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருக்கிறது. அரிசோனா, நெவேடா மாநிலங்களில் சில ஆயிரங்கள் வித்தியாசம் இருக்கிறது. நூற்றுக்கணக்கில் வாக்குகளிடையே வித்தியாசம் இருந்தால் மறுவாக்கு எண்ணிக்கையில் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. ஆயிரங்களில் என்றால் சாத்தியங்கள் குறைவு.
ஜார்ஜியாவிலும், விஸ்கான்சிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும்
ஆனால் டிரம்ப் பென்சில்வேனியாவைப் பெரிதும் நம்பியிருக்கிறார். காரணம் அங்கு தேர்தல் முடிந்த நவம்பர் மூன்றாம் தேதிக்குப் பின்னரும் மூன்று நாள்கள் வரை தபால் வாக்குக்ள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குடியரசுக் கட்சி அதை எதிர்த்து அக்டோபர் மாதமே உச்ச நீதிமன்றம் போயிற்று. நீதிமன்றத்தில் இருந்த எட்டு நீதிபதிகளில் நான்கு பேர் ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் தீர்ப்பளித்ததால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. தேர்தல் நடந்து பிரசினை ஏற்பட்டால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அன்று முடிவு செய்யப்பட்டது.
இப்போது உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இருக்கிறார்கள். காலியாக இருந்த இடத்திற்கு தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் டிரம்ப் குடியரசு கட்சிக்கு ஆதரவான ஒரு வரை நியமித்திருக்கிறார். எனவே இப்போது முடிவு எப்படியிருக்கும் என்பது சுவாரஸ்யமான புதிர்.
உச்சநீதிமன்றம் பென்சில்வேனியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டாலும் வாக்கு வித்தியாசம் அதிகம் இருப்பதால் முடிவில் மாற்றம் இருக்காது என்று ஜனநாயகக் கட்சியினர் சொல்கிறார்கள்.
ஆனால் குடியர்சுக் கட்சியினர் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
டிரம்ப் சொல்வதில் “இன்னும் தேர்தல் முடியவில்லை” என்பது வரை உண்மைதான்.ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை டிரம்ப்பிற்கு கை கொடுக்க வாய்ப்பில்லை.
இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்