அதிமுகவில் தவறு செய்பவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டப்பேரவையில் சட்டம், வனம், சுற்றுச்சூழல், பணியாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை நடந்த விவாதம் வருமாறு:
முத்துக்குமார் (தேமுதிக):
தமிழக சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை. முறையான பராமரிப்பு கிடையாது.
அமைச்சர் பா.வளர்மதி:
உறுப்பினர் எந்த சிறைக்கு சென்று பார்த்தார்? அவரது கட்சியினர் யாராவது சிறைக்குப் போய் வந்தார்களா?
(இவ்வாறு அமைச்சர் கேட்டதும் தேமுதிக உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்து குரலெழுப்பினர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக கொறடா சந்திரகுமார் ஆகியோர் அமைச் சரின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.)
அமைச்சர் வளர்மதி:
உங்கள் கட்சியினரின் யோக்கியதை என்ன என்பது குறித்து முதல்வர் நேற்று கிழிகிழியென்று கிழித்தாரே, அதற்கு பயந்துகொண்டு ஓடினீர்களே.
(இதற்கும் தேமுதிக உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.)
முதல்வர் ஜெயலலிதா:
அதிமுகவில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகின் றனர். தவறு செய்தவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு வக்காலத்து வாங்குவதில்லை.
அமைச்சர் வைத்திலிங்கம்:
உங்கள் கட்சித் தலைவரை ‘கேப்டன்’ என்று சொல்கிறீர்களே. அவர் எந்த பட்டாலியனுக்கு கேப்டன்? தவறு செய்த யாரை அவர் கட்சியிலிருந்து நீக்கினார்?
(தேமுதிக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரும் எழுந்து கோஷமிட்டதால் பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பேரவைத் தலைவர் ப.தனபால் எழுந்து, அனைவரையும் உட்காரச் சொன்னார். ஆனால், தேமுதிகவினர் தொடர்ந்து கோஷம் போட்டனர்.)
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:
உங்கள் தலைவர் எவ்வழியோ நீங்களும் அவ்வழியே கையை நீட்டி பேசுகிறீர்கள். பேரவைக்கென சில மரபுகள் உள்ளன. அவற்றை மதித்து நடக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா:
தேமுதிக உறுப்பினர் சாந்தி இன்னும் உங்கள் கட்சியில்தான் இருக்கிறார். அவரைப் பார்த்து ஓடுகாலி, துரோகி என்று சொல்கிறீர்கள். அப்படியானால் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? கட்சியை விட்டு நீக்க வேண்டியதுதானே?
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
உங்களை வழிநடத்த பண்ருட்டி ராமச்சந்திரன் என்ற நல்ல தலைவர் இருந்தார். உங்கள் தொல்லை தாங்காமல்தான் அவரும் கட்சியை விட்டு போய்விட்டார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.