டெல்லி: மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 28-ம் தேதி விழுப்புரம் வருகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதே நாளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் தமிழகத்திற்கு வருகை புரிந்து மதுரையில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனிடையே வரும் 19-ம் தேதி நிர்மலா சீதாராமனும், 21-ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வருகிற 25-ஆம் தேதி பிரதமர் மோடியும் தமிழகம் வருகிறார். இந்நிலையில் 28-ஆம் தேதி மீண்டும் மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அப்போது விழுப்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.
இதனிடையே பிப். 27, 28, மார்ச் 1-ம் தேதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட உள்ளார். தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபடுகிறார். மேலும் இம்மாத இறுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தேசிய தலைவர்களின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.