இன்று அமலாக்கத்துறையினர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இச்சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவைத் திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி நடைபெற்ற போது, இவ்வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையினர் சோதனையை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்தில் வட மாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை பாஜக தமிழ் நாட்டிலும் பயன்படுத்தி வருகிறது’’ என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.