அமெரிக்க விஞ்ஞானி, நார்வே தம்பதிக்கு மருத்துவ நோபல் !

Filed under: உலகம் |

nobel_medicine_2141311f2014-ம் ஆண்டின் மருத்துவம் / உடற்கூறியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மூவர் வென்றுள்ளனர்.

மூளை உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ’கீஃபே மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்படி நம் மூளை அடையளம் காண்கிறது? ஒரு இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்திற்கு எப்படி நம்மால் சரியாக செல்ல முடிகிறது? அதே பாதையில் அடுத்த முறை செல்லும்போது எப்படி மூளை அதை நினைவில் வைத்துக் கொள்கிறது. செல்போன்களில் இருக்கும் ஜி.பி.எஸ். போல் மூளையில் செயல்படும் அந்த அணு எது? இதைத் துல்லியமாக கண்டுபிடித்து சாதனை புரிந்ததற்காகவே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஓ’கீஃபே, நார்வேயைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மே- பிரிட் மோசர், எட்வர் ஐ. மோசருக்கும் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஆல்பிரட் நோபலின் பிறந்தநாளான டிசம்பர் 10-ல் நோபல் பரிசு வழங்கப்படும். விருதுக்கான பரிசுத் தொகையில் பாதி, ஜான் ஓ கீஃபுக்கு வழங்கப்படும். மீதி பாதி, மோசர் தம்பதிக்கு வழங்கப்படும்.

ஜான் ஓ’கீஃபே: 1939-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். அமெரிக்கா, பிரிட்டன் என இருநாட்டு குடியுரிமையையும் அவர் பெற்றுள்ளார். கனடாவின் மெக். கில் பல்கலை.யில் உடற்கூறியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 1971-ல், எலி ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்போது அதன் மூளையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட திசுக்கள் உந்தப்படுவதை அவர் கண்டுபிடித்தார். அதே எலி, மற்றொரு இடத்துக்குச் செல்லும்போது வேறு ஒரு திசு உந்தப்படுவதையும் கண்டறிந்தார். மூளையில் உள்ள இந்த ‘இடமறியும் உயிரணுக்கள்’ (Place cells) தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான மேப்பை மூளையில் உருவாக்குகிறது எனும் கூற்றை கண்டுபிடித்தார். மேலும் மூளையில், ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியிலேயே இந்த குறிப்பிட்ட ‘இடமறியும் உயிரணுக்கள்’ (Place cells) உள்ளன.

மே-பிரிட் மோசர் மற்றும் எட்வர்ட் ஐ. மோசர்:

மே-பிரிட் மோசர், 1963-ல் நார்வேயில் பிறந்தார். ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் மனோதத்துவம் பயின்றார். 1995-ல் நரம்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். எட்வர்ட் ஐ. மோசரும், மே-பிரிட் மோசரும் இணைந்து 2005-ல் இடமறியும் திசுக்கள் குறித்த அடுத்தக்கட்ட கண்டுபிடிப்பை முடித்தனர்.

மூளையின் அருகே உள்ள என்டோரைனல் கார்டெக்ஸ் எனும் பகுதி குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்போது தூண்டப்படுவதாகவும். ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதும் இவை ஒருவிதமான செல் கட்டமைப்பை ஏற்படுத்துவதாகவும். இந்த ‘கிரிட் செல்’ கட்டமைப்பே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மனிதன் சென்றுவர உதவுவதாகவும் கண்டறிந்தார்.