அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று அதிகாலை இறந்த தலைமை செவிலியருக்கு கொரோனா இல்லை என்று மருத்துவமனை டீன் மறுத்துள்ளார்.

சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும்  ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரு தினங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறந்த 58 வயதாகும் பிரிசில்லா கடந்த ஏப்ரல் மாதமே பணி ஓய்வு பெற வேண்டியவர். ஆனால் அரசு பணிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்ததால் பணி செய்துள்ளார். இன்னும் 3 நாட்களில் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ள அவர் கொரோனாவால் இறக்கவில்லை என இப்போது மருத்துவமனை டீன் வசந்தி மறுத்துள்ளார்.

பிரிசில்லாவின் மருத்துவ அறிக்கையில் கோவிட் என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்தும், யார் அவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரக பாதிப்புடன் சர்க்கரை நோய் இருந்ததாகவும், அதனால் அவரை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.