விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், ஆம் ஆத்மி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
டில்லி அமைச்சர் சவுரவ் பரத்வாத் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இக்கூட்டணியில் தொடரக் கூடாது என அழுத்தக் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆறு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆறு முறையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகவில்லை. வரும் 26ம் தேதி கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் ஆஜர் ஆகுவாரா? என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டில்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், “இன்னும் 2-3 நாட்களில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார். அமலாக்கத்துறை மட்டுமன்றி சிபியையும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதிலிருந்து பாஜகவின் பதற்றம் அதிகரிப்பது தெரிகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும். இந்திய கூட்டணியில் தொடரக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எங்களுக்கு விசாரணை ஏஜென்ஸிகளை கண்டு பயமில்லை. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.