இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குளத்தில் தீ வைத்து அதில் குதித்து சாகசம் செய்த வீடியோ வைரலானது. அவரையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் இளைஞர்களிடையே தலைவிரித்தாடுகிறது. தங்கள் ரீல்ஸை அதிக லைக்ஸ் பெற வைப்பதற்காகவும், ஃபாலோவர்களை அதிகரிப்பதற்காகவும் ஆபத்தான பல சாகசங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் புத்தந்தருவை குளத்தில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்கள் இளைஞர்கள் சிலர். தண்ணீரின் மேல் நெருப்பு எரிந்துக் கொண்டிருக்கும்போது மேலே இருந்து ஒரு இளைஞர் அந்த நெருப்பில் குதித்து சாகதம் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குளத்தில் பெட்ரோல் ஊற்றி மாசுபடுத்துவது மற்றும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களை செய்வதை பலர் கண்டித்து வந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆபத்தான சாகசம் செய்து ரீல்ஸ் எடுத்த யூட்யூபரான ரஞ்சித் பாலா, அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கிராஜா ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.