இன்று பிரதமர் நரேந்திர மோடி பல ஆயிரம் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க கேரளாவுக்கு வருகை தந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, முதலில் கேரளாவுக்கு இன்று மாலை பிரதமர் மோடி வருகிறார். கொச்சி விமான நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, 6 மணிக்கு ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான கல்லடி கிராமத்துக்கு சென்று ஆதி சங்கர ஜென்மபூமியை பார்வையிடுகிறார். ரூ,1,950 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கொச்சி மெட்ரோ ரயில்வேயின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதையடுத்து, குருப்பந்தரா – கோட்டயம் – சிங்கவனம் ரயில்வே வழித்தடத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகர் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பெரும்பாலான வடமாநிலங்களில் நிலைத்து நிற்கும் பாஜாகவால் தென் மாநிலங்களில் கால் பதிக்க முடியவில்லை. இதனால் தென் மாநிலங்களை குறிவைத்து பாஜக காய்களை நகர்த்துகிறது. ‘ஆபரேஷன் சவுத்’ என்ற பெயரில் இதற்கான திட்டத்தை பாஜக மேற்கொள்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.