ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கடும் விமர்சனம்!

Filed under: அரசியல்,இந்தியா |

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 241 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம் என்று விமர்சித்துள்ளார்.

2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து கொண்டது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 241 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ’ நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க.வின் ஆணவப்போக்கால் அக்கட்சியை ராமர் தண்டித்துவிட்டார். அவர்களின் ஆணவம் காரணமாக ராமரால் அந்தக் கட்சி 241 இடங்களோடு தடுத்து நிறுத்தப்பட்டது. ராமர் மீது பக்தி கொண்டிருந்தவர்கள் படிப்படியாக ஆணவக்காரர்களாக ஆகிவிட்டனர். ராமரின் பக்தர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான நேரம் சரியானதல்ல என்று பெரும்பாலான சாதுக்கள், துறவிகள் கூறினார்கள். சாதுக்கள், துறவிகளின் கருத்தை மோடி புறந்தள்ளிவிட்டார்” என்று இந்திரேஷ் குமார் குறிப்பிட்டார்.