புது டெல்லி, ஏப்ரல், 25
தேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு 28 நாட்களுக்கு பிறகு, பஞ்சாப் மாநிலம், கபுர்தாலாவில் உள்ள இந்திய ரயில்வேயின் தயாரிப்பு பிரிவான ரயில் பெட்டி தொழிற்சாலை ஏப்ரல் 23ம் தேதி அன்று தனது தயாரிப்பு பணியை மீண்டும் தொடங்கியது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இடைவிடாத போரில், உள்துறை அமைச்சகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் வெளியிட்ட அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், வழிமுறைகள் மற்றும் உத்தரவுகளை பின்பற்றி தொழிற்சாலை திறக்கப்பட்டது. ரயில் பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நகர் பகுதியில் வசிக்கும் 3744 பணியாளர்கள் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர்.
உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநில அரசுகளின் அறிவுரைகளின் படி, இந்திய ரயில்வேயின் இதர தயாரிப்பு பிரிவுகள் அறிவுறுத்தப்படும் நேரத்தில் உற்பத்தியை தொடங்கும்.
உற்பத்திக்கான ஆதாரங்கள் அளவாக இருந்த போதும், கபுர்தாலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை இரு வேலை நாட்களில் இரண்டு பெட்டிகளை தயாரித்தது. அதிக திறன் கொண்ட சரக்கு பெட்டி ஒன்றும், சரக்கு மற்றும் மின் ஆக்கி வாகனம் ஒன்றும் ஏப்ரல் 23ம் தேதி அன்றும் 24 ம் தேதி அன்றும் தயாரிக்கப்பட்டன.