நடிகர் விஜய் சேதுபதி இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதைப் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்குபவர். அவர் இயக்கிய “பட்லாபூர்” மற்றும் “அந்தாதூன்” ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் “அந்தாதூன்” உலகளவில் புகழ்பெற்ற படம். இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்துக்கு “மெர்ரி கிறிஸ்துமஸ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளது. இதற்கான ஒத்திகையில் ஸ்ரீராம் ராகவன், காத்ரினா கைப் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. படத்தில் விஜய் சேதுபதி தமிழ் பேசும் நபராகவே நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவரின் உரையாடல்களை காத்ரினா கைபுக்கு மொழி பெயர்த்து சொல்லும் கதாபாத்திரத்தில் நடிகை தீபா வெங்கட் நடிப்பதாக கூறப்படுகிறது.