இந்த நாடு வாடகைக்கு விடப்படுகிறது; சீமான்!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் கலாமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகளின் ஆட்சி வந்த பிறகு தான் சகித்து கொள்ள முடியாத ஊழல், லஞ்சம், ஒழுங்கற்ற நிர்வாகம், அவதூறு பேச்சு, விமர்சனங்கள், அநாகரிக பேச்சுக்கள், அரங்கேறியது. மோடியின் ரோடு ஷோவில் கருத்தை பேசுவதில்லை. கையை மட்டும் ஆட்டிக்கொண்டு செல்கிறார். இவர்கள் பத்தாண்டுகளில் செய்ததை எதையும் எடுத்துப் பேச முடியாதவர்கள். மோடி திடீரென பணம் செல்லாது என அறிவித்தார். யாரை பிடிக்கவில்லையோ அவர்களை என்ஐஏவில் தூக்கி உள்ளே போடுகிறார்கள். எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என அழித்து ஒழிக்க நினைத்தால் நாட்டில் ஜனநாயகம் எங்கே இருக்கும்?. இந்தியாவில் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. அடிப்படையில் இருந்து மாற்ற வேண்டும். எதைப் படித்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்ற கல்விமுறை தான் இங்கே இருக்கிறது. அனைவரும் எனது நாட்டிற்கு வந்து தயாரியுங்கள் என்பது வாடகை தாய் பொருளாதாரக் கொள்கை. இந்த நாடு வாடகைக்கு விடப்பட்டிகிறது. நீட் தேர்வை அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் நடத்துகிறது. இவ்வளவு பெரிய நாட்டில் தனது மாணவர்களுக்கு ஒரு தேர்வை கூட நடத்த முடியவில்லை. இந்த ஐந்து ஆண்டுக்கான தேர்தல் என்பது நல்லது செய்வதற்காக அல்ல. 95 சதவீத நாட்டை விற்று விட்டார்கள். இன்னும் ஐந்து விழுக்காடு தான் இருக்கிறது. இன்னும் ஐந்து வருடங்கள் கொடுத்தோம் என்றால், அதையும் விற்று விடுவார்கள். அதை அதானியும் அம்பானியும் வாங்கி விடுவார்கள். எல்லாமே தனியார்மயம் என்றால், இந்த தேர்தல் எதற்கு? தனியார் சிறப்பாக நடத்துவார்கள் என்றால், ஆட்சியையும் தனியாரிடம் கொடுத்து விட வேண்டியது தானே? இதற்கு பேர் தான் ஜனநாயகம், மக்களாட்சி, சுதந்திர நாடு? தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சியை ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி என கட்டமைப்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. மோடிக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் கொடுத்தால் சவக்குழி தோண்டி, நம்மை புதைத்து மூடிவிட்டு போவார். அதே பஞ்சம், பசி, வறுமை, ஏழ்மை, கொடுமை தான் இருக்கபோகிறது. மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? இத்தனை முறை ஓடோடி வந்து ரோடு ஷோ செய்யும் மோடி, நீங்கள் வெள்ளத்தில் மிதந்த பொழுது ஒரு தடவை ஓடி வந்து பார்த்திருக்க வேண்டும் அல்லவா? அல்லது அறிக்கை விட்டு இருக்க வேண்டும் அல்லவா? நம்மை அவர்கள் ஒரு உயிராகக் கூடக் கருதமாட்டார்கள். இந்த நிலத்தை ஏன் இந்தியாவோட வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த நிலத்தில் உள்ள வளம் தான் காரணம். மீத்தேன், ஈத்தேன் கங்கை நதிக்கரையில் இல்லையா? ஏன் தமிழ்நாட்டில் எடுக்கிறார்கள்? எனது மண்ணை நாசமாக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் பிடித்து தொங்குவது என்பது பேராபத்து எனத் தெரிவித்தார்.