இயக்குநர்கள் சங்கம் பிளவுபடாமலிருக்க விக்ரமனும் ஆர்.கே.செல்வமணியும் எஸ்.ஆர்.எம்.குழும நிறுவனமும் சாதிக்கட்சித் தலைவருமான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து உடையாரை சங்கத்துக்கு அழைத்து அட்டகாசமான டுபாக்கூர் விழா நடத்தினர். இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இலவச மருத்துவம் செய்யப்படும் என்ற ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள். எந்த நோய்க்கு? எப்படிப்பட்ட ஆபரேஷனா மருத்துவ பரிசோதனையா? எதுவும் விவரம் தெரிவிக்கப்படவில்லை. அனைவரும் பாரிவேந்தரை பாரிவள்ளல், கொடைவள்ளல் என்பதோடு நில்லாமல் எம்.ஜி.ஆர். அளவுக்கு (?) புகழ்ந்தனர்.
விக்ரமனுக்கு முன்பு இயக்குநர் சங்க செயலாளராக அமீர் பதவி ஏற்ற கையோடு, இதே எஸ்.ஆர்.எம். கல்லூரியுடன் உதவி இயக்குநர்களுக்கு இலவச பயிற்சி தருவதற்காக இதே பாணியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுவரை எத்தனை பேர் பயிற்சி பெற்றார்கள் என்றால் ஒருவரும் இல்லை என்பதே நிஜமான பதில். கல்லூரி நிர்வாக அதிகாரி பால சுப்பிரமணியமும் இதை ஒத்துக்கொண்டார். அப்படியிருக்க இரண்டாவது ஒப்பந்தம் என்ற பெயரில் மீண்டும் அட்டகாசமாக அல்வா கொடுக்கப்பட்டிருக்கிறது. வெத்துவேட்டு அரசியல் (சா)வாதிகளுக்கு இயக்குநர் சங்கமும் பலிகடாவானதை விவரமறிந்த உதவி இயக்குநர்கள் கிண்டலாக பேசி சிரித்ததை விழாவில் பலர் நேரில் கண்டனர்.