இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி !

Filed under: இந்தியா |

இரட்டை அடுக்கு கதர் முகக்கவசம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையம், அதை அதிக அளவில் விநியோகிப்பதற்கான தருவிப்பு ஆணைகளைப் பெற்றுள்ளது.

அதன் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் அரசுக்கு மட்டுமே 7.5 லட்சம் கவசங்களை வழங்க ஒரு ஆர்டரை அது பெற்றுள்ளது. இதில், 5 லட்சம் முகக்கவசங்கள் ஜம்மு மாவட்டத்துக்கும், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் புல்வாமா மாவட்டத்துக்கும், ஒரு லட்சம் உதம்பூர் மாவட்டதுக்கும் மற்றும் 10,000 குப்வாரா மாவட்டத்துக்கும் விநியோகிக்கப்படும். இந்த மாவட்டங்களின் வளர்ச்சிஆணையர்களின் உதவிக்காக ஏப்ரல் 20க்குள் இந்த முகக்கவசங்கள் வழங்கப்படும். மூன்றுமடிப்புகள், முடிச்சு போடுவதற்காக முனைகளில் நான்கு வசதிகள் ஆகியவற்றோடு 7 அங்குல நீளமும் 9 அங்குல அகலத்திலுமாக மறுபடியும் உபயோகிக்கக் கூடிய இந்தக் கவசம் உள்ளது.

ஜம்முவுக்கு அருகில் உள்ள நக்ரொட்டாவில் உள்ள காதி தையல் நிலையம் தற்போது முகக்கவசம் தைக்கும் நிலையமாக மாற்றப்பட்டு, ஒரு நாளைக்கு 10,000 முகக்கவசங்கள் அங்கு தயாராகின்றன. பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கும், ஸ்ரீநகரிலும் அதனைசுற்றியுள்ள காதி நிறுவனங்களுக்கும் மிச்சமுள்ள ஆர்டர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.