சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் தனியாக அழைத்து சுமார் 10 நிமிடங்கள் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று விழா முடிந்த உடன் நேரு ஸ்டேடியத்தில் உள்ள விருந்தினர் அறைக்கு பிரதமர் மோடி நேராக சென்றார். உள்ளே சென்றதும் தனது உதவியாளரிடம் கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உள்ளே அழைக்குமாறு கூறியுள்ளார் மோடி. இதனை அடுத்து தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது- அவரும் அடுத்த நிமிடமே மோடி இருந்த அறைக்குள் சென்றுள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் வரை அறையில் மோடியும் – எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிமுக நிர்வாகிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
டெல்லியில் பாஜக மேலிடத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ள ஓபிஎஸ் கூட வெளியே காக்க வைக்கப்பட்டிருந்தார். பத்து நிமிட சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அறையில் இருந்து வெளியே வந்த பிறகு அப்பலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் போன்றோர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்புகளும் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தன. பிறகு மோடி அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்று கேரளாவிற்கு சென்றார். பிரதமர் மோடி விழா மேடையில் அரசியல் எதுவும் பேசவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியுடனான மோடியின் சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது என்கிறார்கள்.
பத்து நிமிடங்களே பேசினால் அதிமுக – பாஜக கூட்,டணி உறுதியாகிவிட்டதாக சொல்கிறார்கள். ஏற்கனவே உறுதியான கூட்டணி தான் என்றாலும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சில் இழுபறி நீடித்தது. ஆனால் மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்றும் அதே சமயம் தேர்தல் தொடர்பாக சில வாக்குறுதிகளை மோடி எடப்பாடிக்கு அளித்தாகவும், அந்த வாக்குறுதி எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். இதனால் தான் மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டதாக சொல்கிறார்கள்.
மோடி கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மிக விரைவில் தொடங்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பேச்சுவார்த்தை குழுவை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்கிறார்கள். இதே போல் பாஜக தரப்பிலும் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். இரண்டு குழுக்களும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மோடி மீண்டும் வரும் 25ந் தேதி தமிழகம் வருகிறார்.
மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மோடியின் அடுத்த தமிழகம் வருகை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்ததாக இருக்கும் என்கிறார்கள். எனவே அதற்குள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்துவிடுமாறு பாஜக மேலிடம் அதிமுகவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் எனவே மிக விரைவில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.