25.09.2021: டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரும், இந்திய தொழில்நிறுவனக் கூட்டமைப்பின் தலைவருமான
டி.வி. நரேந்திரன், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியின் (என்.ஐ.டி திருச்சி) 57 வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், கற்றலுக்கு முடிவே இல்லை; ஒருவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொண்டே இருக்கின்றார் என்றார், அவர் மாணவர்களை விடாமுயற்சியுடன் தங்கள் கனவுகளைத் தொடருமாறு கூறினார். அவர் மாணவர்களை உறவுகளை கட்டமைக்கவும்,வளர்க்கவும், அவைளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினார். தான் ஆர்.ஈ.சி திருச்சியில் பயின்ற காலத்தை நினைவுகூர்ந்து, இக்கல்லூரி தம்மை வடிவமைத்திருப்பதாகப் பெருமையுடன் கூறினார்.
வளாகத்தின் பலதரப்பட்ட மக்கள் மற்றும் அனுபவங்கள், தம்மைத் தனிப்பட்ட முறையிலும் தொழில்முறையிலும் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுத்தன
என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.நம் வாழ்வைப் பாதிக்கும், உலகில் நிகழும் பெருமாற்றங்கள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க
வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். சமீப காலத்திய குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றான ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வளர்ச்சியைப் பற்றி
விவரித்த அவர், அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியா உலக அளவில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறினார். எதிர்காலத்தில் தீர்மானிக்கும் காரணிகளாக காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை, அவர் வலியுறுத்தினார். மேலும், அறிவு மற்றும் திறன்களை வளர்ப்பதன் அவசியத்தை சுட்டிக்காட்டி, அவையே இனிவருங்காலத்தில் நம்மை வேறுபடுத்தும் காரணிகளாக இருக்கும் என்றார். என்.ஐ.டி திருச்சி நிர்வாகக் குழுத் தலைவர் திரு. பாஸ்கர் பட் தலைமையுரை ஆற்றினார். பெருந்தொற்றுக் காலத்தில், குறைவான நேரடி தொடர்போடு, தங்கள் கல்வியைத் விடாமுயற்சியுடன் தொடர்ந்துத், தேர்ச்சிப பெற்ற மாணவர்களை வாழ்த்தினார். தடுப்பூசிகளின் வடிவில் முன்னெடுக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு நன்றி தெரிவித்து, விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று அவர் நம்புவதாகக் கூறினார். கழகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க, கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடர, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் என்.ஐ.டி களில் என்.ஐ.டி திருச்சி முதலிடம் பிடித்திருப்பதற்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ், தலைமை விருந்தினர் மற்றும் நிர்வாகக் குழுவின் தலைவரை வரவேற்றுத், தனது அறிக்கையை
வழங்கினார்.மூலோபாயத் திட்டம் 2019-24, செயல்படுத்தப்பட்டதன் எதிரொலியாகக் கழகம் அடைந்துள்ள ஒட்டுமொத்த வளர்ச்சி, சமீபத்திய என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் வெளிப்படுவதாகக் கோடிட்டுக் காட்டினார். என்.ஐ.டி திருச்சி, தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக அனைத்து என்.ஐ.டிகளிலும்
முதலிடத்தைத் தக்கவைத்து, அதன் ஒட்டுமொத்தத் தரவரிசையை 23 ஆக உயர்த்தியுள்ளது என்றார். கடந்த வருடத்தில் கழகத்தின் குறிப்பிடத்தக்க
சாதனைகளாக அவர் பட்டியலிட்டவை: புதிய கல்வி கொள்கை 2020 அமல்படுத்தியது, புதிய முதுகலைப் பட்டப்படிப்புகளால் மாணவர் எண்ணிக்கையை 7000 தாண்டி உயர்த்தியது, மூன்றிலொரு பங்கு பெண் ஆசிரியர்களுடன் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்தியது, ஆசிரியர் ஆராய்ச்சியில் அதிகரித்த காப்புரிமைகள் மற்றும் மேற்கோள்களுடன் புதிய உச்சத்திற்கு சர் சென்றது , புதிய பல்துறைசார் ஆராய்ச்சி மையங்களை அமைத்தது , சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கூட்டுழைப்புகள், தஞ்சை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு , டி.இ.க்யூ.ஐ.பி மூன்றாம் கட்டத்தில் அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியிலும், உயர்ந்த தணிக்கை மதிப்பெண்ணாக 1.03 பெற்று முதலிடம் பெற்றது , பெருந்தொற்று வருடத்திலும் 92% வேலைவாய்ப்புகள்,பசுமை ஆற்றல் மற்றும் பசுமை வளாகத்திற்கான அர்ப்பணிப்பு,500 படுக்கை வசதி கொண்ட கோவிட் பெருந்தொற்று பராமரிப்பு மையம் அமைத்தது. கழகத்தைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதற்காக, கழகத்தினரின்ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். பட்டம்பெறும் அனைத்து மாணவர்களையும் வாழ்த்திய அவர், என்.ஐ.டி திருச்சியின் புகழை இன்னும் உயர்த்திச் செல்வார்கள் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
முன்னதாக, இதே நாளில் இயந்திரப் பொறியியல் மற்றும் உலோகவியல் மற்றும் மூலப்பொருட்கள் பொறியியல் துறைகளுக்கான இணைப்புக்கட்டிடங்களுக்கு ,
இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ், முனைவர் ஏ ஆர் வீரப்பன், முனைவர் பி ரவிசங்கர் மற்றும் திரு சி கே வர்மா முன்னிலையில் திரு.டி.வி நரேந்திரன்
அடிக்கல் நாட்டினார்.