முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ என தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது. அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது. பத்தாண்டுகளாக வரிக்குறைப்பின்றி இருந்துவந்த நிலையில் வெறும் 17,500 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதும், இக்குறைப்புகூட புதிய வரிமுறையில் மட்டுமே செய்யப்பட்டு, பழைய முறையில் எவ்வித குறைப்பும் அளிக்கப்படாததும் மத்தியதரக் குடும்பங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்திற்கு வழங்கிட வேண்டுமென்று மீண்டும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.