“காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்” என்று ஓடும் காரிலிருந்து 15 வயது சிறுமியின் கூச்சல் கேட்டு பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சென்னை தி.நகர் அருகே ஓடும் காரில் திடீரென ஒரு சிறுமி உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த கார் சென்ற பாதையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த காருக்கு உரியவர் மகேந்திரன் என்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது தனது 15 வயது மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும் காரில் சென்று கொண்டிருந்தபோது தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை அடுத்து அவரை குடும்பத்தினர் கேலி செய்ததாகவும் அப்போது தனது மகள் விளையாட்டாக தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டதாகவும், இது வேடிக்கையாக தான் நடந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் இளம் பெண் காரில் கடத்தப்பட்டதாக தவறாக நினைத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து சாலையில் இதுபோன்ற விளையாட்டுத்தனம் செய்யக்கூடாது என்று மகேந்திரனை எச்சரித்து அறிவுரை கூறி காவல்துறையினர் அவரை அனுப்பி வைத்துள்ளனர்.