ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

Filed under: அரசியல் |

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ”50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேன்மொழி வெற்றிபெறுவார்” என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறிவருவதைப்பார்த்தால், மீண்டும் தேன்மொழிக்குத்தான் சீட்டு என்று கட்சியினர் பேசி வந்தார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக கூட்டணியில் இருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன், நிலக்கோட்டை தொகுதியில் தனக்கு சீட் ஒதுக்குமாறு அதிமுகவிடம் கேட்டு வந்தார்.அதிமுகவிடம் தொகுதியை கேட்டுக்கொண்டிருக்கும்போதே, ‘நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜான் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தேன்மொழி தரப்பினரை அதிரவைத்தது

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் அதை வெளியிட்டுள்ளனர்.

அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடு.

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன், ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்று, நிலக்கோட்டையில் தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஜான் பாண்டியன் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்.