கட்சி தலைவர் ஒருவர் சென்னையில் தனது மனைவியை அபகரித்ததுடன் சொத்திலும் பங்கு கேட்டதால் காங்கிரஸ் பிரமுகர் ஆள் வைத்து கொலை செய்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த காங். பிரமுகரான கோபால். 55 வயதான கோபாலின் மனைவி கவுரி. இவர் சில ஆண்டுகள் முன்னதாக கோபாலை பிரிந்துள்ளார். மாங்காடு பகுதியை சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவரான ராஜாஜி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாஜி, கவுரியை தனது மனைவி என்று சொல்லி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தது முன்னாள் கணவரான கோபாலை கோபப்படுத்தி வந்துள்ளது. கவுரி ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி நடத்தி வந்துள்ளார் ராஜாஜி. அதுமட்டுமல்லாமல் கோபால் வாங்கிய சொத்துகளில் சில கவுரியின் பெயரில் இருந்துள்ளது. அதில் பங்கு தருமாறு ராஜாஜி கேட்டு பிரச்சினை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜாஜியை பழிவாங்க கோபால் சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ராஜாஜியின் தம்பி கண்ணனுடன் கிருஷ்ணகுமார் என்பவருக்கு பகை இருந்து வந்தது கோபாலுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் கிருஷ்ணகுமாருடன் சேர்ந்து கொண்ட கோபால் ராஜாஜியை கொலை செய்ய கிருஷ்ணகுமாரை தூண்டி விட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று குமணன்சாவடியில் டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த ராஜாஜியை கிருஷ்ணகுமார் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கிருஷ்ணகுமாரை பிடித்த நிலையில் இதில் பின்னணியாக செயல்பட்ட கோபாலும் சிக்கியுள்ளார். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.