ஒட்டாவா, செப் 22:
கனடாவில், பாராளுமன்ற தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.
கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை. எனினும், அந்த தேர்தலில் லிபரல் கட்சி 155 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியானது.
பின், பிரதமராக பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ருடோ, பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்துவதை விரும்பாமல், முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். இதையடுத்து, கடந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 20ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் ட்ருடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றது. இதனால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது.
எனினும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லாததால், அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ட்ருடோ தொடர உள்ளார்.
தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.