முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை உள்ளிட்ட பன்முகக் கலைஞராக பணியாற்றியவர்.
அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைத்தனர். ஆனால், சென்னையில் ஏற்பட்ட அதிகனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் இவ்விழா தேதி மாற்றப்பட்டது. அதன்படி, கலைஞர் 100 விழா வரும் 6ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடக்கிறது. எனவே இவ்விழாவிற்கு வரும்படி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை நேரில் சந்தித்த தமிழ்த் திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்கள் அவர்களுக்கு புதிய அழைப்பிதழை வழங்கினர்.