கோவை, மே 11
வே மாரீஸ்வரன்
கோவை கல்வி நிறுவனங்கள் கட்டணம் கட்ட சொல்லி நிர்பந்தம், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி. ஆர். நடராஜன் எம். பி. கோரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில் கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்டச் சொல்லி நிர்ப்பந்திப்பதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.
உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலையீடு செய்து இந்த சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் பள்ளிகள் தேவைப்பட்டால் பள்ளி வளாகத்தை பேரிடர் மேலாண்மைக்காக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சுயநிதி தனியார் பள்ளிகள் பெற்றோர்களை கல்வி கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்த படுவதாகவும் அவ்வாறு கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டும் இணையவழிக் கல்வி வழங்கப் போவதாகவும் தெரியவருகிறது.
மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் கல்வி கற்க இயலாது என்று மிரட்டுவதாகவும் தெரிகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர் உள்ளிட்ட சில ஊழியர்களை பள்ளிக்கு வரவழைத்து அலுவலகப் பணி நடைபெறுவதாகவும் புகார் எழுகிறது. ஆசிரியர் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை முழுமையாக தரவில்லை என்றும் புகார் எழுகிறது இவை அனைத்தும் சட்டவிரோத செயல் என்பதை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் உணர்ந்து தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி அரசு அனுமதி இல்லாமல் பள்ளி அலுவலகம் உள்ளிட்ட பள்ளியின் எந்த பகுதியும் திறக்கக்கூடாது என்பதை பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
பேரிடர் காலம் என்பதால் மத்திய பாடத் திட்டம்மா அல்லது மாநில பாடதிட்டமா என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பள்ளிகளும் தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியான உத்தரவுகளை பின்பற்றுவதை கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவாதப்படுத்த வேண்டும் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்க பட்டத்தையும் ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை மாணவர்களை கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிட கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன்.