கள்ளக்காதல் தொடர்பை துண்டித்துக் கொண்ட பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில், அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். உயிருக்கு பயந்து அந்த பெண் ஓட முயற்சித்த போது, அந்த வாலிபர் விடாமல் துரத்திச் சென்று அந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அந்த பெண்ணை, அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணை கத்தியால் குத்திய நபரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் நடத்தி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட பெண் சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான ரவிக்குமார் என்பவரது மனைவி சுமதி (42). கடந்த சில மாதங்களாக ரவிக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது மனைவி சுமதி திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது மாரிமுத்து (30) என்பவருடன் சுமதிக்கு செல்போன் மூலமாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியதை அடுத்து, சுமதியும், மாரிமுத்துவும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றித்திரிந்து உள்ளனர். இது தொடர்பாக சுமதியின் உறவினர்களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் சுமதியை கடுமையாக கண்டித்துள்ளனர். இதையடுத்து மாரிமுத்து உடனான தொடர்பை சுமதி துண்டித்துள்ளார். மாரிமுத்துவின் செல்போன் அழைப்புகளையும் அவர் ஏற்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சுமதியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.