“கள்ளக்குறிச்சி அருகே தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகம் அவர்களை அடித்து கொலை செய்துள்ளது” என மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நேற்று கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே பங்கா ரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு எதிரே தனியார் நிலத்தில் உள்ள தரைக் கிணற்றில் நேற்று முன்தினம் இக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா, திருவாரூர் வ.உ.சி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா ஆகியோர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. தகவலறிந்த சின்னசேலம் போலீ ஸார், மாணவிகளின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விழுப்புரம் டிஐஜி அனிசா உசேன், எஸ்பி நரேந்திரன் நாயர் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் கல்லூரி தாளாளர் வாசுகியின் மகன் சுவாகத் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கல்லூரி விரிவுரையாளர் கோடீஸ்வரி, விடுதி வார்டன்கள் லட்சுமி, சுமதி ஆகிய 3 பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளாளர் தலைமறைவு
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி தாளாளர் வாசுகி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது கணவர் சுப்பிரமணியன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி, கல்லூ ரிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி கோட் டாட்சியர் (பொறுப்பு) பத்ரிநாத் தலைமையிலான அதிகாரிகள் கல்லூரிக்கு சீல் வைத்தனர். அப்போது ஏடிஎஸ்பி அனிஷ்யா டெய்சின், டிஎஸ்பி மதிவாணன், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் சையத்காதர் உடன் இருந்தனர்.
கல்லூரி தாளாளர் வாசுகி மற்றும் அவரது கணவரை கைது செய்ய கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னைக்கு விரைந்துள்ளனர்.
சரண்யாவின் பெற்றோர் பிரேத பரிசோதனை நடத்த ஒப்புக் கொண்டனர். மற்ற மாணவிகளின் பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கல்லூரி நிர்வாகிகள் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பண மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.