பறவைக்காய்ச்சல் கேரளாவில் கோழி, வாத்து போன்ற பறவைகளுக்கு கண்டறியப்பட்டது. தற்போது முதன்முறையாக காகங்களுக்கும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் கேரளாவில் கோழி, வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதும் அதை தொடர்ந்து அவற்றை அழித்து பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதுபோன்ற பறவைக்காய்ச்சல் நேரடியாக மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பப்பட்டது. மெக்ஸிகோவில் முதியவர் ஒருவர் பறவைக்காய்ச்சல் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பறவைகளிடமிருந்து இது மனிதர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதை அறிவியல் உலகம் கண்டுக்கொண்டுள்ளது. கேரளாவின் ஆழப்புலா மாவட்டத்தில் பண்ணைக் கோழிகள், வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு அவை அழிக்கப்பட்டன. சமீபத்தில் அப்பகுதியில் உள்ள முகம்மா என்ற கிராமத்தில் ஏராளமான காக்கைகள் இறந்து கிடந்துள்ளன. அந்த காக்கைகளின் மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டதில் அவை பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பறவை இனங்களில் காக்கைகள் எளிதில் எந்த நோயாலும் பாதிப்பு அடையாதவை என கருதப்படுகிறது. அப்படி இருந்தும் அவை பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவை கோழி, வாத்து போல பண்ணை பறவையினங்கள் கிடையாது என்பதால் இவை மூலமாக பரவும் பறவைக்காய்ச்சலை தடுப்பது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.