தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புள்ளதாக வைத்திருக்க விரும்பும் ஒரு முக்கிய கதர் சட்டையின் & அர்த்தமுள்ள கதறல் இது…
அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இல்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி மரியாதைக்குரிய கட்சியாகத்தான் இருந்தது! என்றாவது ஒருநாள், தமிழகத்தில் காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிப் பார்த்துவிடவேண்டும்’ என்ற வாழ்நாள் கனவோடு காத்திருந்த என் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு, தமிழக காங்கிரசின் கடைசி நாட்களைப் பார்க்க வேண்டிய துர்பாக்கியம் எற்பட்டுள்ளதை நினைக்கும்போது, எனது கண்கள் கண்ணீரால் நிறைகின்றன!
*பாராளுமன்றத் தேர்தல்கள் வருகிறது என்றால், “காங்கிரஸ் கட்சி என்னோடா அல்லது உன்னோடா” என்று, திராவிட கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் காத்துக்கிடந்த நாட்கள் போய், “காங்கிரஸ்காரர்களைப் பார்த்தாலே, ஆள் பிடிக்க வருகிறார்களோ என்று பயமாக இருக்கிறது” என்று, கடலை வியாபாரியாக இருந்து சென்னை கடலையே கபளீகரம் செய்துவிட்ட டி.ஆர்.பாலு போன்றவர்கள், மேடைகளில் பேசி நையாண்டி செய்யும் நிலைமைக்கு, நாம் வந்துவிட்டோம்!
அப்படி நம்மை இழித்துப் பேசியவர்களையும் பார்த்துப் பல்லைக் காட்டி, அவர்களுக்கே சால்வை அணிவித்து, எப்படிக் கோபப்பட்டாலும் இன்னும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகிட வேண்டும் என்று ஆசைப்படுகின்ற நமது தலைவர்களைப் பார்த்து, எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை!
* தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரசோடு இணைத்துவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசின் அத்தனைப் பதவி சுகத்தையும் அனுபவித்துவிட்ட ‘மக்கள் தளபதி’ (?) வாசன், தனது கடைசி கேபினெட் மீட்டிங்கை முடித்த கையோடு வெளியே வந்து, பிரதமர் வீட்டு முன்பே நின்று கொண்டு, “தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு, காங்கிரஸ் தலைமைதான் காரணம்” என்று, தெனாவட்டாக பேட்டி கொடுத்துள்ளார்!
* தினமலர் பத்திரிகை 11&3&2014ல் ஒரு செய்திக் கட்டுரையினை வெளியிட்டுள்ளது! அந்தக் கட்டுரையில், “வர இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க.வோடு கூட்டணி ஏற்படாமல் போனதற்கு, குலாம் நபி ஆசாத்தும் அகமது பட்டேலும் தங்கபாலுவும்தான் காரணம்” என்று, கூறப்பட்டுள்ளது! இந்தச் செய்திக் கட்டுரையை எழுத ஏற்பாடு செய்தது, குறுக்கு மூளை படைத்த வாசனும் ஞானதேசிகனும்தான்!
தமிழகத்தில் சிங்கமாக நின்றிருந்த காங்கிரசை சீரழித்த இவர்கள் இருவரும், இன்று பழியினை மற்றவர்கள் மீது சுமத்தித் தப்பிக்க நினைக்கிறார்கள்!
*கடந்த பத்தாண்டுகளாக தமிழகக் காங்கிரசில் எந்த அசைவும், வாசன் அனுமதியில்லாமல் நடக்கவில்லை! அவர்தான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்! அவர்தான், தனிப்பொறுப்பு இராஜாங்க கப்பல் மந்திரி! அவர்தான், காபினெட் மந்திரி! அவர் சொன்னவர்தான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்! அவர் சொன்னவர்கள்தான், நாடாளுமன்ற வேட்பாளர்கள்! அவர் சொன்னவர்கள்தான், சட்டமன்ற உறுப்பினர்கள்! தமிழக காங்கிரஸ் கட்சியில் இன்று நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிர்வாகிகளிலும், மாவட்டத் தலைவர்களிலும் வாசனால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள், 60 சதவிகிதத்திற்கும் மேல்!
இப்படி, சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருந்த வாசன், எல்லாம் முடிந்து, பிரதமர் வீட்டைவிட்டு வெளியே வந்து, பிரதமரின் வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டு, “மேல் மட்டம்தான் இந்த நிலைக்குப் பொறுப்பு” என்று பேட்டி கொடுத்தால், சொரணையுள்ள காங்கிரஸ்காரன் இதனை ஏற்றுக்கொள்வானா?
*தேர்தலையே சந்தித்திராதவர், போராட்டக் களத்தைப் பார்க்காதவர், சிறைக்குச் செல்லாதவர், அகில இந்திய காங்கிரசின் செயலாளராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர், சுயமாகப் பேசத்தெரியாதவர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதற்குக் கூட, முக்கி & முனகி திணறுபவர் என்று, பல ‘பெருமைகள்’ உடைய இந்த மகத்தான ‘மக்கள் தளபேதி’தான், கடந்த பத்தாண்டுகளாக தமிழக காங்கிரசை வழிநடத்தி வருகிறார்!
இவர் பொறுப்பேற்ற பிறகு, வேறு யாருக்கும் எந்த பதவியும் வந்துவிடக்கூடாது என்பதிலே, கவனமாக இருந்தார்! மாவட்டத் தலைவர்களை மாற்ற விடமாட்டார்! நிர்வாகிகளை நியமிக்க விடமாட்டார்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை செயல்பட அனுமதிக்கமாட்டார்! பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று மக்களை அணி திரட்டும் எந்த நடவடிக்கைகளையும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பாக நடந்துவிடக் கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தார்!
*திருமண அழைப்பிதழ்கள், விழாக்களுக்கான போஸ்டர்கள் எல்லாவற்றிலும், இவர் படம் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டும் என்றும், அன்னை சோனியா, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது படங்கள், எவ்வளவு சிறியதாக இருக்க முடியுமோ அவ்வளவு சிறியதாக இருந்தால்தான், நிகழ்ச்சிகளுக்கு அவர் வருவார் என்பதை, அவரது உதவியாளர் மூலம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குச் சொல்ல வைத்து, ஒரு ஆபாசமான விளம்பரக் கலாச்சாரத்தை, தமிழ்நாட்டில் உருவாக்கிய பெருமை, இவரையே சாரும்!
தன்னைப் பார்க்க வரும் தொண்டர்களின் பாக்கெட்டில், தனது படம் இருக்கிறதா என்று பார்ப்பார்! அப்படிப் ‘படம்’ வைத்திருப்பவர்களிடம் (படம் காட்டுபவர்களிடம்) பாசமாகப் பேசுவார்! தோளில் கை போடுவார்! முதுகைக்கூட, சில
சமயங்களில் சொரிந்துவிடுவார்!
தப்பித்தவறி ராஜீவ், அன்னை சோனியா, ராகுல் படங்களை வைத்துக்கொண்டு தொண்டர்கள் வந்துவிட்டால், அவர்களைப் பார்த்தும் & பார்க்காததுபோல், இருந்துவிட்டு, அந்தத் தொண்டர்களை அவமானப்படுத்தி அனுப்பிவைப்பார்! காங்கிரசுக்கு விரோதமாக, காங்கிரஸ் தலைமைக்கு விரோதமாக தரம் குறைந்து பேசுகின்ற தலைவர்களை, தனியாக (தமிழருவி மணியன், வைகோ போன்றவர்களை) தொலைபேசியில் அழைத்து, அன்புடன் நலம் விசாரிப்பார்! அவர்களுக்கு, எல்லாவிதமான உதவிகளையும் கணிசமாக செய்வார்!
*சனிக்கிழமைகளில், இவர் சென்னை வரும் நாட்களில் மட்டும், தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வார்! எந்த சிபாரிசு கேட்டாலும், சனிக்கிழமை வந்து விடுங்கள் என்று, அவரது உதவியாளர்கள் சொல்வார்கள்! “வரும்போது, எல்லோரையும் அழைத்து வந்து விடுங்கள்… தலைவர் அவர்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்…” என்று, தனியாக வேறு தகவல் அனுப்புவார்கள்! இப்படி வருகின்றவர்களை, காலை 9 மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை வெளியே போகாமல் பார்த்துக் கொள்ளும் பணிக்கென்றே, வாசன் வீட்டில் ஒரு கைதேர்ந்த ‘டீம்’ வேலை செய்கிறது! டெல்லியிலிருந்து யாராவது & காங்கிரஸ் வி.ஐ.பி.க்கள், தலைவர்கள் வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் போன் செய்து, “தலைவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்… முக்கியமான விஷயம்… எல்லோரையும் உடனடியாக அழைத்து வாருங்கள்…” என்று சொல்லி, ஒரு சிறிய கூட்டத்திற்கு உடனடியாக வாசன் உதவியாளர்கள் ஏற்பாடு செய்துவிடுவார்கள்!
டெல்லி தலைவர்களது கார், அருகில் வந்தவுடனே, வாசன் அந்தக் கட்சிக் கூட்டத்தினர் மத்தியில் போய் நின்று கொள்வார்! ஒரே தள்ளுமுள்ளாக இருக்கும்! உடனே அவர்கள் பக்கத்தில் உள்ள சுவர் மீது அல்லது காரின் மீது ஏறிக்கொள்வார்கள்! தொண்டர்களை அமைதிப்படுத்துவது போல, சிலரை சும்மானாங்காட்டியும் அதட்டுவார்! டெல்லிகாரர்களுக்கு, இந்தக் காட்சி ஆச்சர்யமாக இருக்கும்! “வாசன் வீட்டில் எப்போதும் தொண்டர்கள் கூட்டம், கட்டுக்கடங்காத உற்சாகம்…” என்று அவர்கள் எண்ணிக் கொள்ளவேண்டும். அதைப் போய் டெல்லியில் சொல்ல வேண்டும் என்பதுதான், இந்த ‘செத்தவன் வாயில வெத்தல பாக்கு’ என்கிற நாடகத்தின் உள்நோக்கம்.
தான் இல்லாத நாட்களில் அல்லது இடங்களில், எவ்வித கட்சி நடவடிக்கையும் நடந்துவிடக்கூடாது என்பதிலே, மிகவும் கவனமாக இருந்த வாசன், கடந்த பத்தாண்டுகளாக தமிழகக் காங்கிரசையே முடக்கிவிட்டார்!
*அகில இந்திய காங்கிரஸ் தலைமை, ஏதாவது மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்தால், “நான்தான் மெஜாரிட்டி. தொண்டர்கள் என்னோடுதான் இருப்பார்கள். எனது அனுமதி இல்லாமல் எதையாவது செய்தால், தொண்டர்கள் கொதித்து எழுந்து விடுவார்கள்” என்று மிரட்டி, சில அப்பாவித் தொண்டர்களை ஏற்பாடு செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களின் கொடும்பாவியை எரிக்கச் சொல்வார், ‘மக்கள் தளபேதி’ வாசன்!
*விஷ்ணுபிரசாத் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, தனது ரௌடிகளை ஏவிவிட்டு, சத்தியமூர்த்தி பவன் மீதே கல்லெறியச் செய்த கொடுமையைச் செய்தவரும், வாசன்தான்! தனக்கு எதிராக மூத்தத் தலைவர்கள் ஏதாவது பேசினால், அவர்களையே ரௌடிகளை விட்டுத் தாக்கச் சொல்வார்! எஸ்.ஜி.விநாயகமூர்த்தியை சத்தியமூர்த்தி பவனுக்குள் வைத்து, வாசன் ஆட்கள் நாயடி & பேயடி அடித்ததை, என்னால் எப்படி மறக்க முடியும்? இதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, பிறகு ஒன்றும் தெரியாததுபோல, பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, ஆறுதல் சொல்வார்!
*மொத்தத்தில், ‘அமைதிப்படை’ படத்தில் வந்த சத்தியராஜ் கேரக்டர்தான், ஜி.கே.வாசன்!
*ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, இதைப்போன்ற பித்தலாட்டங்களை இவரால் நடத்த முடியவில்லை! தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக, ஈரோடு யுவராஜா என்பவரை இவர் நிறுத்தினார்! இந்த யுவராஜா, வாசனுடைய மைத்துனர் சுரேஷ் மூப்பனாரின் ‘கிளாஸ்மேட்’! அவருக்கு சப்ளை மற்றும் சர்வீஸ் எல்லாம், யுவராஜாதான்! மாலை நேரங்களில் யுவராஜா எந்நாளும் மிகவும் ‘சந்தோஷமான’ மூடில்தான் இருப்பார்!
*மாநிலத்தில் இளைஞர்களுக்குத் தலைமையேற்க, எவ்விதமான தகுதியும் இல்லாதவர்! யுவராஜாவின் நடவடிக்கைகளும் பேச்சும், ராகுல் காந்திக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை! கோஷ்டி அரசியல் இல்லாத இளைஞர் காங்கிரசை உருவாக்க நினைத்த ராகுல் காந்திக்கு, வாசன் கோஷ்டியின் மொத்த அடையாளமாக செயல்பட்ட யுவராஜாவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!
*தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் நிர்வாகியாக இருந்த ஒரு இளம் பெண் -ஐஸ்வர்யா, திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்! அந்தத் தற்கொலையைப் பற்றியும், அதில் யுவராஜாவுக்கு இருந்த தொடர்பு பற்றியும், பல வாரப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின! மத்திய அரசின் உளவுப் பிரிவு, இந்தச் செய்தியை ராகுலின் கவனத்திற்குக் கொண்டுபோனது! உளவுத்துறையின் விசாரணை அறிக்கையைப் பார்த்த ராகுல்காந்தி, அதிர்ந்து போனார்!
உடனடியாக அகில இந்திய இளைஞர் காங்கிரசிலிருந்து சில நிர்வாகிகளை சென்னைக்கு அனுப்பி, விசாரிக்கச் சொன்னார்! அவர்களும் சம்பந்தப்பட்ட எல்லோரையும் விசாரித்து, ராகுலுக்கு விரிவான அறிக்கை ஒன்றைத் தந்தனர்! இப்படி ஒரு ஒழுக்கங்கெட்டவரை தலைவராக வைத்திருந்தால், தனது மானம் கெட்டுவிடும் என்று நினைத்த ராகுல், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரை வாசனிடம் அனுப்பி, யுவராஜாவை ராஜினாமா செய்யச் சொல்லும்படி, வலியுறுத்தினார்! இரண்டு மூன்று முறை சொல்லியனுப்பியும், பயனில்லை! வாசன் யுவராஜாவைக் கூப்பிட்டு, “நீ ராஜினாமா செய்யவேண்டாம். என்னை மீறி என்ன நடக்கும்? பார்க்கலாம்” என்று சொன்னவுடன், யுவராஜா தெனாவட்டாக ‘மாலை நேர மகிழ்ச்சியில்’ ராகுலைப்
பற்றித் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்! அருகில் இருந்த ஒரு ‘தேசிய நெஞ்சம்’, அதை அப்படியே மொபைல் போனில் பதிவு செய்து, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரிடம் கொடுத்துவிட்டது! அதனைக் கேட்ட ராகுல், கொதித்துப்போய், யுவராஜாவைப் பதவியிலிருந்து நீக்கினார்!
*தனது தகுதியைப் பற்றி மிக அதிகமாக நினைத்துக்கொண்டிருக்கின்ற வாசன், தனது அதிகாரத்தை, ராகுல் காந்திக்குக் காட்ட, யுவராஜாவைத் தூத்துக்குடி துறைமுக அறங்காவலராக நியமித்தார்!
“ராகுல்காந்தி நீக்கினால், நான் நியமிக்க மாட்டேனா?” என்ற வாசனது இறுமாப்பினை, விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி., காஞ்சிபுரம் விஸ்வநாதன் எம்.பி. போன்ற இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராகுலின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்கள்!
அடுத்த வினாடியில், அகமது பட்டேலிடமிருந்து வாசனுக்கு அழைப்பு! “ஒன்று யுவராஜா பதவி விலகவேண்டும் அல்லது நீங்கள் பதவி விலக வேண்டும்” என்று, அகமது பட்டேல் சொன்னார்!
பதறிப்போனார், வாசன்!
பதவி சுகம் இல்லாமல் இருக்க, இவர் என்ன தலைவர் மூப்பனாரா? தூத்துக்குடியிலிருந்து கண்ட்லாவரை, விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைவரை, கல்கத்தாவிலிருந்து எண்ணூர் வரை, மூன்று லட்சம் கோடிகளுக்குப் பணி நடக்கும்போது, பாதி நிரம்பிய பையோடு திரும்பிவர, வாசன் விரும்புவாரா என்ன? அப்படியே அவர் விரும்பினாலும், அவரது சித்தப்பா ரெங்கசாமியும், மைத்துனர் சுரேஷ¨ம் விட்டுவிடுவார்களா என்ன?
ரெங்கசாமி பதறி, “காரியம் எல்லாம் கெட்டுவிடும். உடனே யுவராஜாவை ராஜினாமா செய்யச் சொல்” என்று வாசனுக்கு சொல்லி, யுவராஜாவிடம் ராஜினாமா கடிதம் வாங்கி, ராகுலுக்கு அனுப்பிய பிறகுதான், வாசனின் பதவி தப்பியது! இல்லையென்றால், அவரது கதையும் ஜெயந்தி நடராஜன் கதைபோல், அன்றே முடிந்திருக்கும்!
இந்த நிகழ்வுக்குப் பிறகு, வாசன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்! அன்னை சோனியாவை மிரட்டியதுபோல், இளவல் ராகுலை மிரட்ட முடியாது என்பதைத் தெரிந்து கொண்டார்! இதற்குப் பிறகு, பலமுறை வாசன் ராகுலைப் பார்க்க நேரம், கேட்டாலும், ராகுல் அப்பாய்ண்ட்மென்ட் கொடுப்பது இல்லை! ‘வாசனை வளரவிடுவது, தனக்குத்தானே குழிதோண்டுவதுதான்’ என்ற முடிவுக்கு வந்துவிட்ட ராகுல், கோஷ்டி அரசியலைத் தமிழகத்தில் அப்புறப்படுத்தத் திட்டமிட்டார்! மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன் போன்ற யாருடனும் கோஷ்டி சேராத நபர்களாகப் பார்த்து, புதிய பொறுப்புகளை வழங்கினார்! இனிமேல் தனது ‘பிரேமானந்தா நடிப்பு’, காங்கிரசில் போனியாகாது என்று தெரிந்து கொண்ட வாசன், ஒரு புதுத் திட்டம் தீட்டினார்!
*என்ன அந்த திட்டம்?
நாடாளுமன்றத் தேர்தலுக்குள், மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து சில நாடாளுமன்றத் தொகுதிகளைப் பெற்று, பின்பு மத்திய அரசில் மந்திரி ஆவதுதான், அவரது திட்டம்!
*அந்த திட்டம் என்ன ஆனது?
-அடுத்த இதழிலும் கதறல் தொடரும்!