காதலி முன்னே காதலன் ஓட ஓட விரட்டி படுகொலை!

Filed under: சென்னை |

நடுரோட்டில் காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் கிழக்கு திருவள்ளுர் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் உதயா என்ற உதயகுமார் (22). இவர் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சிட்லப்பாக்கம் சேது நாராயணன் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் உதயாவை வழிமறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உதயகுமார் தப்பிக்க முயற்சித்த போது அந்த கும்பல் ஓட ஓட விரட்டி காதலி கண்முன்னே சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உதயகுமார் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சரணடைந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாம்பரம் கிழக்கு திருவள்ளுவர் நகர், கண்ணப்பர் தெருவில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் உதயகுமாருக்கும், நரேஷிற்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது உதயகுமார், நரேஷ்சை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயாவை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.