கிரிக்கெட் வீரர் என் பயோபிக் படத்தை ரிலீஸ் செய்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011ம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது வர்ணனையாளராகவும் விமர்சகராகவும் செயல்பட்டு வரும் தடாலடியான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். இவரின் பயோபிக் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் இணைந்து பணியாற்றிய அவர் கருத்து முரண் காரணமாக படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இப்படம் நவம்பர் 13ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து பேசியுள்ள அக்தர் “அந்த படம் என் கனவுத்திட்டம். பல பேரின் உழைப்பு நிறைந்துள்ள படம். ஆனால் அதில் சரியாக சில விஷயங்கள் அமையவில்லை. அதனால் அப்படத்தின் அடுத்தகட்ட முயற்சிகள் ஏதேனும் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.