பாஜக தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம்- என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடைகள், உணவகங்கள் என ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதற்கு, திமுக அரசின் நிவாரணம் என்ன? தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட தென்சென்னை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஏற்கனவே பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், இந்த இடமாற்றத்தால் யாருக்குமே எந்தப் பலனும் இல்லை. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துக் கட்டணத்தை விட, சென்னையின் பல பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகமாக இருப்பது திமுக அரசுக்குத் தெரியுமா? போக்குவரத்து நெரிசல் அதிகமில்லாத, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே புறநகர் பேருந்துகள் சென்னை மாநகரத்தினுள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை நிறுத்தி விட்டு, கோயம்பேடு மற்றும் சென்னையின் பிற பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திற்கும் இடையே ஐந்து, பத்து நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்திருப்பதைப் போன்ற அறிவிலித்தனம் வேறு உள்ளதா? எந்த போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது திமுக அரசு? தமிழகம் முழுவதும் இருந்து தினம் சென்னை வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு, இத்தனை அவசரகதியில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை இடம் மாற்றி, அந்த இடத்தில் என்ன திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்கள் என்று ஏன் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளும், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் பயணிகளுக்கான போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்படும் வரை, அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் மீண்டும் கோயம்பேட்டில் இருந்தே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், திமுக தலைவரின் பெயர் வைத்ததற்காக மட்டுமே, பல்லாயிரக்கணக்கான மக்களை தினந்தோறும் அல்லலுக்குள்ளாக்குவதை, திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.