குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள விருது!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக அரசு தகைசால் தமிழர் விருதை குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த 2021-ல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் ஆணையிட்டிருந்தார். இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி போரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது. தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.