சென்னை,மே 6
இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த, 33,627 கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 1000 உதவித் தொகை வழங்குவதற்காக ரூபாய் 3,36,27,000/- (மூன்று கோடியே முப்பத்தாறு இலட்சத்து இருபத்திஏழாயிரம் மட்டும்) அரசால் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பூசாரிகளின் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் பெற்றளித்தல் ஆகிய பணிகளை கிராம நிருவாக அலுவலர்கள் மூலமாக மேற்கொண்டு விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்களுக்கு அளித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் ஆகியோரால் 18.4.2020 மற்றும் 24.4.2020 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, பூசாரிகளை கண்டறிதல் மற்றும் நிவாரணத் தொகை விடுவித்தல் தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தகுதியுள்ள பூசாரிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வங்கிக் கணக்கு விவரங்கள் பெற்று வழங்கப்பட்டவுடன், வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட வேண்டும் எனவும் இத்துறை உதவி ஆணையர்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையில் நாளதுவரை 33,463 பூசாரிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இவர்களில் நாளதுவரை தகுதியுள்ள 20,415 பூசாரிகளுக்கு நிவாரணத் தொகை தலா ரூபாய் 1000 அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
60 வயதைக் கடந்தவர்கள், இறந்தவர்கள், வேறு பணிகளுக்குச் சென்றவர்கள், வேறு இடங்களுக்கு சென்றவர்கள் உள்ளிட்ட காரணங்களால் 12,368 பூசாரிகளுக்கு தகுதியில்லாத காரணத்தினால் நிவாரணத் தொகை வழங்க இயலவில்லை.
மேலும், இப்பணியானது தொடர்ந்து நடைபெற்று மீதமுள்ள தகுதியுள்ள கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.