கோயம்பேட்டில் வணிக மைய திட்டத்தை கைவிட அன்புமணி கோரிக்கை!

Filed under: அரசியல்,சென்னை |

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைந்திருக்கும் இடத்தில் சென்னை மாநகரின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில், அந்த இடத்தில் கலை, கலாச்சாரம் மற்றும் வணிக மையத்தை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. நச்சு வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு ஆர்வம் காட்டாதது கண்டிக்கத்தக்கது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் 36 ஏக்கரிலும், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கரிலும் செயல்பட்டு வருகின்றன. சென்னைக்கு வெளியே கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டதால், பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு வருவதில்லை. பூந்தமல்லி அருகே கூத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையமும், முடிச்சூரில் கட்டப்படும் ஆம்னி பேருந்து நிலையமும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது கோயம்பேட்டில் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் முழுமையாக காலியாகி விடும். அவற்றுடன் கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர் நிலத்தில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருந்தேன். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலமுறை நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், இப்போது கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைந்துள்ள நிலத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் வணிக மையத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதில் கலை, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றுக்கான திறந்தவெளி சந்தை, உணவு வளாகம் ஆகியவற்றை ஏற்படுத்தவும், வணிக மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிதி மையத்தை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் பகுதி மற்றும் அதையொட்டிய நிலங்களை இணைத்து 16 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.