கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு; உண்மையை கூறிய நிறுவனம்?

Filed under: உலகம்,தமிழகம் |

ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இந்தியாவில் கொரோனாவுக்காக செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதை இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகமே முடங்கியது. இந்தியாவில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டனை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தியாவில் அதன் தயாரிப்பு பணிகள் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்கு அதிகளவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக 50க்கும் மேற்பட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில் ஜேம்ஸ் ஸ்கா என்பவர் கடந்த 2021ல் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டபோது ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அப்போது அதற்கு விளக்கமளித்த ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் தங்கள் தடுப்பூசியால் ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது பிரிட்டன் நீதிமன்றத்தில் தடுப்பூசி குறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியால் TTS – Thrombosis with Thrombocytopenia Syndrome என்ற ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் ரத்த ப்ளேட்லெட் கவுன்ட் குறையும் என்றும் கூறியுள்ளது. இது கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பிரிட்டன் மக்களையும், இந்தியர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.