கோவை தெற்கு: பாஜக போட்டியிட வாய்ப்பு!
கோயம்புத்தூர் மேற்கு தொகுதியாக இருந்த கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த தொகுதிகள் மறுசீரமைப்பில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக மாறியது. மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சி.அரங்கநாயகம், திமுக முன்னாள் எம்.பி. மு.ராமநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்ற தொகுதி. முழுக்க முழுக்க மாநகரப் பகுதிகளை கொண்ட இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு 2 தேர்தல்களை சந்தித்துள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோயம்புத்தூர் மாநகராட்சியின் வார்டு எண் 21 முதல் 47 வரை.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் – 1,25,416
பெண்கள் – 1,25,950
மூன்றாம் பாலினத்தவர் – 23
மொத்தம் – 2,51,389
தொழில், சமூக நிலவரம்
கோவை மாவட்டத் தலைமையிடமாகவும், நகரின் இருதயமாகவும் இருப்பது கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், மாநகராட்சி மைய அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சிறைச்சாலை, கடை வீதிகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோனியம்மன் கோயில் என கோவையின் முக்கியமான பகுதிகளை தன்வசம் கொண்டிருக்கும் தொகுதி. தொழில், கல்வி வளர்ச்சியில் மேம்பட்ட தொகுதி. படித்த வாக்காளர்கள் நிறைந்த தொகுதி. வியாபாரம், போக்குவரத்து, அரசு அலுவல் சார்ந்த மையப் பகுதி என்பதால் பல்வேறு தரப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். வடமாநிலத்தவர்கள், இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.
கடந்த தேர்தல்கள்
கடந்த 1951 முதல் 2006 ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மேற்கு தொகுதியாக இருந்த இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக திமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி 80,637 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி 52,841 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக 27,796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து 2016 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் அம்மன் கே.அர்ச்சுணன் 17,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் அம்மன் அர்ச்சுணன் 59,788 வாக்குகளையும், காங்கிரஸ் கட்சியின் மயூரா எஸ்.ஜெயக்குமார் 42,369 வாக்குகளையும், பாஜகவின் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளையும் பெற்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெற்கு தொகுதியில் உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த பகுதியில் இருக்கும் உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
புலியகுளம் பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த அவிநாசி சாலையில் சுமார் 10 கி.மீ. நீளத்துக்கு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
தீர்க்கப்படாத மக்கள் பிரச்னைகள்
உக்கடம் பகுதியில் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்காததால் உக்கடம், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. நகரின் மையப் பகுதியில் காந்திபுரம் நகர, புறநகர பேருந்து நிலையம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக பணிகள் தொடங்கவில்லை.
அதேபோல் உக்கடம் பகுதியில் இருக்கும் லாரி மார்க்கெட்டை புறநகர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற பல ஆண்டு கால கோரிக்கையும் கிடப்பிலேயே இருக்கிறது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்பது தொடர் கனவாகவே இருக்கிறது. 2011 தேர்தல் அறிக்கையில் கோவைக்கு மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று அதிமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காந்திபுரம், 100 அடி சாலை, கிராஸ்கட், ஒப்பணக்கார வீதி, ரயில் நிலையம் பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. ரயில் நிலைய பாலம், லங்கா கார்னர், வடகோவை ரயில்வே பாலம் ஆகியவை மழைக்காலங்களில் வெள்ளத்தால் நிரம்பி, போக்குவரத்து பாதிக்கப்படும் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. நகை தயாரிக்கும் தொழிலாளர்கள் செல்வபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் இருக்கின்றனர். நகை தொழிலாளர்கள் தங்களுக்கென்று தனியாக நகைத் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்
கோவையின் அடையாளங்கள் நிறைந்த தொகுதியான தெற்கில், கடந்த 2 முறை நடைபெற்ற தேர்தலிலும் அதிமுகவே வென்றுள்ளது. இதனால் தற்போதைய எம்எல்ஏவான அம்மன் கே.அர்ச்சுனன் மீண்டும் இந்தத் தொகுதியை கேட்டு வருகிறார். ஆனால் தமிழகத்தில் பாஜக பலமாக இருக்கும் சில இடங்களில் இதுவும் ஒன்று என்பதால் பாஜகவும் கோவை தெற்கு தொகுதியை கேட்டு வருகிறது.
பாஜக சார்பில் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
திமுக சார்பில் போட்டியிட கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன், நிர்வாகிகள் பி.ஆர்.அருள்மொழி, பி.நாச்சிமுத்து, பசுபதி, மார்க்கெட் மனோகரன், மீனா ஜெயக்குமார் உள்ளிட்ட நீண்ட வரிசையில் பிரமுகர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரம் கடந்த முறை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால் ஏற்கெனவே போட்டியிட்ட கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரும் தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
கோவை தெற்கு தொகுதி முக்கியமான தொகுதியாக கருதப்படுவதால் இங்கு போட்டியிடுபவர்களும் விஐபிக்களாகவே இருப்பார்கள் எனலாம்.