சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்தோம். இம்முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது. இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று அம்மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.