கோவை, ஏப்ரல் 22
வே. மாரீஸ்வரன்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் பகுதியில் வசிக்கும் 39 வயது பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ். ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர். மற்றும் அவரது உறவினர்கள், அவருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் என அனைவரையும் சுகாதார துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
நேற்றைய (21/ 4/ 2020) நிலவரப்படி கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனையில் 294 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 134 பேரில் 75 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்சமயம் 59 பேர் உள்ளனர்.
திருப்பூர் நீலகிரியை சேர்ந்த 46 பேரையும் சேர்த்து மொத்தம் 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைப்போல் 153 பேரில் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் இருக்கிறது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் போலீஸ் நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து அவருடன் போக்குவரத்து தொடர்பில் இருந்த 45 பேரிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. அதில், 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது என்றார்.
கோவை மாவட்டத்தில் பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது கோவை மாவட்டத்தில் பணி புரியும் காவலர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.