டிபன் கடையில் சாப்பிட்டுவிட்டு ரூ.20ஐ கொடுக்காமல் சென்ற விவசாயியை அக்கடைக்காரர் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் கொன்னக்குடி கிராமத்தை சேர்ந்த 58 வயதான ஏசுதாஸ் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில் ஏசுதாஸ் அதே பகுதியில் ஜோசப்ராஜ் நடத்தி வந்த ஓட்டலில் டிபன் சாப்பிட்டுள்ளார். அதில் ரூ.20 தர வேண்டியது இருந்த நிலையில் கடனாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதை அவர் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. கடந்த 8ம் தேதி இரவு ஓட்டல் வழியாக ஏசுதாஸ் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஏசுதாஸை வழிமறித்த ஜோசப்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆரோக்கியமேரி 20 ரூபாய் கடன் பாக்கி தராததற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த ஜோசப்ராஜ் ஒரு பெரிய மூங்கில் கம்பை எடுத்து ஏசுதாஸை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஏசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஜோசப்ராஜை கைது செய்துள்ளனர். தலைமறைவான அவர் மனைவி ஆரோக்கிய மேரியை தேடி வருகின்றனர். வெறும் 20 ரூபாயை கடனுக்காக விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.