சினிமா பாணியில் சென்னையில் ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் கைதாகியுள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் கூடுவாஞ்சேரியில் வயர் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். அங்கேயே ரூம் எடுத்து அவர் தங்கியிருந்த நிலையில் அவருடன் கதிர், யுவராஜ் என இரண்டு இளைஞர்களும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒருவரை அந்த 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை இளைஞரின் நண்பர்களான கதிரும், யுவராஜும் கூட காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை யார் காதலிப்பது என்பது குறித்து அவர்களுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கதிரும், யுவராஜும் புதுவண்ணாரப்பேட்டை சென்று அங்கு 17 வயது இளைஞரை தாக்கியுள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்க கையை தானே வெட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் வெட்டியதாக காவல் நிலையத்தில் இளைஞர் புகார் அளித்துள்ளார். விசாரணையில் மேற்படி விவரங்கள் தெரிய வர மூவரையுமே போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு பெண்ணுக்காக சண்டை போட்டுக் கொண்ட மூன்று நண்பர்களும் சினிமா பாணியில் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.